Tuesday, December 29, 2009

உணர்வுகளாய் தெறிக்கும் நொடிகள் பிறழ்ந்தவனின் மனக் குறிப்புகள்எண்ணங்கள் எழுத்தாய் விரிகிறது
மண்புழு பெரிதாய் குவிந்து
மெல்ல மெல்ல உள்நுழைதல்

அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை

தனித்துவிடப்படல் இயற்கையின் குரூரம்
தனியே வாழமுடியாதது இயலாமையின் மிச்சம்

வாக்கியத்துக்குள் வார்த்தைகளை அடுக்கும் முயற்சி
தொடர்ந்து உள்அடுக்குகளை அறியும் சுழற்ச்சி

ஆடித்து ஆடிக்கொண்டிருக்கற போது
குலுங்குமவள் பிட்டத்து சதை கடிக்க விழையும் மனது

வார்த்தைகளில் மாட்டிப்பிழைப்பவர் எவர்
மாட்டாதவர் எவர் - சிக்கி கிழியும் மனது
நினைவுகளின் ஊடே கடல் கடந்து
காந்தார கலைகளைக் கற்றுத்தேர்ந்து
பிரமீடுகளின் உச்சத்திலிருந்து நிலா தொட்டு

உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற
கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே
கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது

திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்

வெட்டி சுருண்ட விழிகள்
கட்டி இறுகின வலிகள்
முட்டி மோதிய உடல்கள்
தட்டி கீறிய பற்கள்

கடந்து போனது மனது
நின்று சுற்றியது காற்று
பாடும்போது கூடும்போது
எழுதும்போது பிரதி இன்பம்

துணையன்றி ஏதுமில்லைதான்
துணையென்பதும் நீயேதான்
தனித்து வாழாதது மனதின் அச்சம்
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம்

Saturday, December 19, 2009

ஊற்றின் கண்
தன் மௌனமொழி உடைத்து சூன்யமாய்
ஆச்சரியம் பொங்க மூச்சின் மய்யம் மாற்றி
உறக்கத்தையும் கனவுகளையும் ஒன்றாக்கி
எப்பொழுதினிலும் அதனை உணர்ந்து
சுவாசம் உடல் மனம் இருப்பு தாண்டி
நினைவுகளில் நிறையும் தனிவெளி
இலக்கின்றி திரியும் மறைபொருளாய்
எதுவுமற்ற மறைந்த கேலிக்கூத்தாய்
எல்லாம் கலந்து விரியும் பிரபஞ்சமாய்
என்னுள் நீளும் தன்புணரும் சொரூபநிலை
இருத்தலின் பேரானந்தம்
சுரக்கும் ஆதாரம் என
மெல்ல திறக்கும் என்
ஊற்றின் கண்

Monday, December 14, 2009

சித்தப்பு(பா.ரா) புக் ரிலீஸ் விழா


அகநாழிகை பொன்.வாசுதேவனி(ரி)ன் புத்தக வெளியீடு விழாவுக்கு வழக்கம்போல லேட்டாதான் சென்றேன். நுழையும் போதே ஆச்சரியம் காத்திருந்தது என் அபிமான சாரு பேசிக்கொண்டிருந்தார். நேராக முன்னால் சென்று ஓரமாக நின்றுக்கொண்டேன். நர்சிம்மும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். கூட்டங்களில் எப்பொழுதும் நிற்கும் நிலை எங்களுக்கு. சாரு பேச்சினை ரசிக்கும் போது எடுத்த படம் மேலே. அழகான நர்சிம் பக்கத்திலிருந்தும் சுமாராகவாது தெரியும், பச்சை டீசர்டில் அடக்கமாக நிற்பவர் உங்கள், D.R.Ashok.
வழக்கம்போல் சாருவின் உரை அருமை. ஞாநி பேசும் போது அறியதோர் கருத்தை முன்னிருத்தினார். ஏதோ என எழுதாமல் மிடில கிளாஸ் எல்லைட் தாண்டி அடிமட்ட மக்களுக்களின் பிரச்சனைகளையும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 80 சதவிதத்தினர் அரசுபள்ளியில் த்மிழில் தான் படிக்கிறார்கள் என்றார்.
சித்தப்பு உங்க மகளை எனக்கு தெரியமா போச்சு. கேபிள் பதிவுல படிச்சு தெரிஞ்சிகிட்டேன்.
மேலும் படங்களுக்கு http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html இந்த லிங்கை கிளிக்கவும்.
பதிவர்கள் பலரை சந்தித்தது சந்தோஷத்தை கொடுத்தது. எம்.அப்துல்லா, Dr.புருனோ, வா.மணிகண்டன், என்.விநாயக்முருகன், எறும்பு, நிலாரசிகன். ..இப்படி பலர்.
அப்பாலிக்கா சாரு, வாசு(அகநாழிகை), தண்டோரா, கேபிள், ச.முத்துவேல் அதிபிராதபன் மற்றும் பட்டர்பளை சூர்யா அனைவரும் இலக்கிய பேருரை ஆற்றினோம் சாயந்திரப் பிற்பகுதியில்.

Friday, December 11, 2009

வாழ்த்துக்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய்

பக்தியென்றொரு நிலை வகுத்தாய்

பாரதி என்றொரு கவியை படைத்தாய்

அதன் சுடரொளி ஒரு தொடராய்

அகல்விளக்காய்...

என்றென்றும் ஒளிவீசும் நம் கவிஞர்களின் ஊடே..

என் கவிஞன் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Friday, December 4, 2009

கண்டவை கேட்டவை - 3


2012 - அட நம்ம விஜய் படம்மாதிரியிருந்தது. வழக்கம்போல் என் ஐந்தறை வயது மகன் ரசித்து பார்த்தான். படத்தில் radio jackie, இந்திய மனம், எழுத்தாளனின் பார்வை, ஹீரோ ஹீரோயின் குடும்ப நிதர்ஸனம், தலைவர்களின் நாடு பற்றிய நேசம், பெரு வர்க்கத்தின் இயல்பான சுயநலம் என்று படத்தின் ஊடே ஓட்டிக்காட்டுகிறார்கள். அந்த RJ அதிகமா ஸ்கோர் பண்ணிடறார். பற்றியும் பற்றாமலும் படம் பார்க்கமுடிகிறது. பௌத்த சன்னியாசி சிஷ்யனுக்கு கொடுக்கும் ஒரு வரி போதனையும், பேரலையின்போது மணியடித்துக்கொண்டு வாழ்வை(சாவை) எதிர்க்கொள்வதும் கவிதை. விஞ்ஞானம்(பணபலத்துடன்) அதிலிருந்து தப்புவதற்க்கு பெரிய ஷிப் கட்டுவது.
ஆஸ்ரேலியாவிடம் தோற்று இலங்கையிடம் ரண்குவித்து நம் மனதை ஆற்றிவிட்டார்கள் தோனி அன் கோ. ரொம்ப நன்னிங்கன்னா. 10 குழந்தைகளை தண்ணில விட்டு கொன்றுயிருக்கிறார் ஒருத்தர். காரணம் ஒரு செல்போன். நம்மூரில் சைக்கிளில் போவோர் கூட ஸ்டெயலாக ஒரு கையில் போனும் மறுகையால் வண்டியும் ஓட்டுவார். எதிரில் பக்கத்தில் போவோர் மட்டும் ஜாக்கிரதையா போகோனும். போன்ல பேசறது, தேவையில்லாம லேப்டாப் மற்றும் கம்யூட்டர் வைச்சிக்கறது நம்ம நாட்ல சகஜமப்பா. மனிதம் போற்றுதல், பரஸ்பர உதவிகள், மன்னிப்பு, சகிப்புதன்மை அப்படின்னா கிலோ என்ன விலை.
குமுதம் அரசுபதில்களில் சாருவை தேவையில்லாமல் இழுத்துயிருக்குறது. காமெடி+காமநெடி பத்திரிக்கை சாருவை காமெடியாக்க முனைந்துயிருப்பது எவ்வளவு பெரிய காமெடி.


Thursday, December 3, 2009

உறுபசி

பித்துப் பிடித்து அத்துவானக் காட்டில்
கதறி அழுகிறேன்
பின் மிகுந்த ஓலமிட்டு
காடதிரச் சிரிக்கிறேன்
கையில் பெரிய கோடரி கொண்டு
பெரு மரங்களை வெட்டிச் சாய்க்கிறேன்
யானையின் தும்பிக்கை பிடித்து
தூக்கித் தரையிலடித்துக் கொன்று
என் ஓநாய் பற்களால் பசியாறி
தந்த ஆயுதம் செய்து
குன்றிலமர்கிறேன்
வேட்கை மிகுந்து
காதருகே சீறி வந்த மலைப் பாம்பின்
கழுத்தை பிடித்துச் சுருக்கிட்டு
தடித்த மரக்கிளையில்
ஊஞ்சல் கட்டி
கண்ணயரக் காத்திருக்கிறேன்
நானே காடாக
காடே நானாக

நிலவை ருசிக்க
யத்தனிக்கையில்
நட்சத்திரங்களிலிருந்து
கொட்டும் இரத்த மழை


(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)