
தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கையில் இப்போதே தலதீபாவளி கொண்டாடும் புதுமாப்பிள்ளையாக பந்தா காட்டுகிறது நம் பங்குசந்தைகள். மே மாதம் பங்குசந்தை வீழ்ச்சி கண்டதும்; அவ்வளவுதான் இனி மீள எத்தனை மாதம் ஆகுமோ என்று வருந்தியவர்களுக்கு ஒரே பாடலில் பணக்காராணாகும் நம்மூர் ஹீரோ போல பங்குசந்தை ஒரு சில மாதங்களிலேயே ஏகத்துக்கும் வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றிருக்கிறது. சந்தையின் இந்த அபார வளர்ச்சி உள்நாட்டு வர்த்தகர்கள் லாபம் அடைந்தார்களா என்றால், ’இல்லை’ என்றே பதில் வரும்.
முதலீட்டாளர்களுக்கு சந்தை விழுந்தாலும் சரி, வளர்ந்தாலும் சரி முதலில் பலன் வந்து சேரும். ஆனால் வர்தகர்களோ சந்தை போக்கு எப்படியிருப்பினும் ஏற்ற-இறக்க அசைவின் அடிப்படையில் பலனை அனுபவிப்பார்கள். சந்தை மேலே சென்றாலும் தின வர்த்தகர்களுக்கு ஏற்ற சூழல் அமையவில்லை. இதில் பெரிதும் லாபம் அடைந்தது FII’s எனப்படும் பண்ணாட்டு அமைப்புசார் முதலீட்டாளர்களே.
அதிபுத்திசாலிகளே நோட் பண்ணுங்க
1. பொதுவாக ஒரு மாதத்துக்கு ஒரு முறையாவது பங்குசந்தை மேலிருந்து கீழ் சென்று திருத்தம் (correction) காணும் ஆனால் நான்கு மாதமாகியும் திருத்ததிற்கான சான்றுகூட இல்லை.
2. சந்தை மேலேறும்போது வியாபார தடங்களான calloption சரி put option சரி ஒரே அளவில் வர்த்தகம் ஆகாது இந்த முறை OPTION வியாபாரத்தில் இரு வாய்ப்பிலும் ஒரே அளவில் பணமும், பங்கும் வர்த்தகமாகிறது.
3. பங்குகள் பலவும் தங்கள் தடைநிலை அருகிலும் தாண்டியும் வர்த்தகமாகின்றன.
4. உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளைவிட அயல்நாட்டு பொருளாதார சூழலை தாங்கியே நம் பங்குசந்தை வளர்கிறது.
இது சந்தோஷமா? இல்லை சங்கடமா?
நம் பங்குசந்தைகளின் இந்த வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சிக்குறியதாய் இருந்தாலும் சந்தையில் தொடர்புள்ளவர்கள் இதை கொண்டாடலாமா அல்லது அமைதி காக்கலாமா? என்று குழப்புகிறார்கள். முன்பு சந்தை 5400 தொட்டதுக்கே சூப்பர் ஸ்டார் பட ரிலீஸ்போல் ஆட்டம் போட்டவர்கள் இப்போது 5800 என்ற இமயத்தை கடந்தும் ஆர்பாட்டமின்றி அடக்கி வாசிக்கிறார்கள். இதற்கு 2008-ஐ போல் நன்றாய் பறந்து புன்னாக்கும் தீபாவளி ராக்கெட்டாய் சந்தை ஆகுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த குழப்பம். இறங்குதோ இல்லையோ கொண்டாட கிடைக்கும் இத்தருணத்தை நழுவ விடாமல் கொண்டாடுவதே புத்திசாலித்தனம்.
எப்போது திருத்தம் (correction)
என்னதான் பாஸிடிவா பேசினாலும் நெகடீவா சந்தைய அனுகியவர்கள் இப்போது அவஸ்தை படுகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவது :P
மாமியார் (அயல்நாட்டு முதலீடு) உபசரிப்பில் மாப்பிள்ளை (சந்தை) பந்தா காட்டினாலும் எத்தனை நாள் தான் உபசரிப்பார் அந்த மாமியார் கல்யாண பந்தியில் நேரம் நீண்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தி முடிக்கப்பட வேண்டும். அதுபோல சந்தையில் இந்த சக்கைபோடும் விரைவில் அடங்கும். சந்தையில் செய்தியின்மை, ஆவல், அயல்நாட்டு முதலீடு, அதிக பணப்புழக்கம் போன்றவையாகச் சந்தை ஏறியது விரைவில் இந்த சூழல் எதிர்வினையில் அமையப்போவதால் சந்தை நன்றாக கீழிறங்கும். தாங்கு நிலைப்பற்றிய முரண்பாடு நிலவினாலும் தேசிய பங்கு சந்தை குறுகிய காலத்தில் 5200-ஐ தாங்கு நிலையாகவும் 5950 தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகமாகும்.
கட்டுரை உதவி: சிவசங்கர்